திமுக ஆட்சி அமைந்து 3 வருடங்களாக தூங்கிக் கொண்டு இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் தூக்கத்தை மக்களுடன் இணைந்து அறப்போர் இயக்கம் சற்றே கலைத்து விட்டுள்ளது. அறப்போர் இயக்கத்துடன் இணைந்து மக்கள் அனுப்பிய காபி பொடியும், நூற்றுக்கணக்கான ஈமெயில்கள் மூலம் அனுப்பிய கோரிக்கைகளும் அதன் வேலையை செய்ய துவங்கி விட்டன. லஞ்ச ஒழிப்புத்துறையின் மீதான இந்த அழுத்தத்தை நாம் நமது கேள்விகள் மூலம் தொடர்ந்து கொண்டே இருந்தால் ஊழல்வாதிகள் மீதான அவர்களது நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வைக்கலாம்.
லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக ஏன் இந்த பிரச்சாரம்?
இந்த தகவலை பார்த்தாலே ஏன் நாம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக குரல் கொடுப்பது அவசியம் என்பது உங்களுக்கு புரிந்து விடும். சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 8 அலுவலகங்கள் செயல்படுகின்றன. 2021 முதல் அந்த 8 அலுவலகங்களின் செயல்பாட்டை நீங்களே பாருங்கள். வருடம் 27 FIRகள் துவங்கி அது குறைந்து கொண்டே வந்து கடைசியாக இந்த வருடத்தில் 8 மாதங்களில் வெறும் 4 FIRகள் மட்டுமே அவர்கள் பதிந்துள்ளார்கள். அதிலும் கடந்த 3 மாதங்களாக 1 FIR கூட பதிவு செய்யப்படவில்லை. அதாவது சும்மா உட்கார்ந்து தண்ட சம்பளம் வாங்கி இருக்கிறார்கள்.
அப்படி இவர்கள் என்ன சம்பளம் வாங்குகிறார்கள்?
தமிழகத்தில் செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் மட்டுமே வருடம் 54 கோடி செலவாகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட தமிழக அரசு வருடத்திற்கு 90 கோடி செலவு செய்கிறது. இவ்வளவு கோடிகளை விழுங்கி விட்டு தூங்கிக் கொண்டு இருந்தால் அவர்களை தட்டி எழுப்ப வேண்டியது நமது கடமை தானே. அதனால் தான் அவர்களை தட்டி எழுப்ப அறப்போர் இயக்கம் மக்களுடன் இணைந்து Wake Up DVAC என்ற Campaign செய்ய துவங்கியது. இதற்கு மக்களும் அமோக ஆதரவு கொடுத்தார்கள். இதை நீங்கள் அறப்போர் நடத்திய ஆன்லைன் poll மூலம் அறிந்து கொள்ளலாம்.
எந்த வேலையும் செய்யாத, மக்களுக்கு எந்த பயனும் இல்லாத, இழுத்து மூடப்பட வேண்டிய துறை எது என்ற கேள்விக்கு, வாக்களித்தவர்களில் 78% பேர் லஞ்ச ஒழிப்புத்துறை என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே மக்களை திரட்டி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு காபி பொடி அனுப்பி தூக்கத்தை கலைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
செப்டெம்பர் 15 அன்று மாலை மக்கள் ஒன்றுகூடி அறப்போர் அலுவலகத்தில் இருந்து DVACக்கு காபி பொடியுடன் அடங்கிய கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தார்கள். நேரில் வர முடியாதவர்கள் https://arappor.org/send-email-to-dvac-wake-up-dvac/ இந்த இணைப்பை பயன்படுத்தி கோரிக்கை மனுவை ஈமெயில் மூலம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பி வைத்தார்கள்.
நாம் அனுப்பிய காபி பொடியும் ஈமெயில் கோரிக்கையும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்த 2 வது நாள் அறப்போர் கொடுத்த புகாரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது FIR பதியப்படுகிறது.
அறப்போர் இயக்கத்தின் புகார் குறித்து விரிவாக அறிந்து கொள்ள https://youtu.be/EAiAqZXuhd8 இந்த காணொளியை பாருங்கள். இந்த காணொளியில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நெருங்கிய கட்சி பிரமுகர் மற்றும் contractor சந்திரசேகர் எப்படி எல்லாம் டெண்டர்களை செட்டிங் செய்தார் என்றும், டெண்டர் செட்டிங் செய்வதற்காக எப்படி ஒரே ip முகவரியில் இருந்து கணவன் மனைவி, மற்றும் அண்ணன் தம்பி ஆகியோர் போட்டி டெண்டர்களை அப்லோட் செய்தார்கள் என்பது குறித்தும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். போடாமல் விடப்பட்ட மழை நீர் வாய்க்கால் அமைக்க டெண்டர் போடுவதாக சொல்லிவிட்டு ஏற்கனவே இருந்த மழைநீர் வாய்க்கால்களை உடைத்து விட்டு புதிய மழைநீர் வாய்க்கால் அமைத்து பணத்தை கொள்ளை அடித்துள்ளார்கள். இந்த புகாரில் வேலுமணி மற்றும் 10 மாநகராட்சி அதிகாரிகள் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 வருடங்களாக இழுத்தடித்து பதிவு செய்த இந்த வழக்கில் விரைவாக விசாரணையை முடித்து 2 மாத காலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அறப்போர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
இந்த வழக்கை அடுத்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது FIR போடப்படுகிறது. இந்த புகார் குறித்த முழு விவரங்களை அறிந்து கொள்ள https://youtu.be/BXkm-vjf6xU இந்த காணொளியை பாருங்கள்.
வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் கட்டிட அனுமதி கொடுக்க அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் எவ்வாறு 27.9 கோடி லஞ்சம் பெற்றார் என்பது குறித்து தகுந்த ஆதாரங்களுடன் கொடுத்த அறப்போர் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை தொடுத்துள்ளது. அடுத்த நாளே இந்த புகார் அடிப்படையில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக மற்றொரு வழக்கும் போடப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் zero FIR கணக்கில் இருந்த சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அறப்போர் அழுத்தத்திற்கு பிறகு அறப்போர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வரிசையாக 3 FIRகளை போட்டுள்ளது.
அறப்போர் இது வரை கொடுத்துள்ள 30 ஊழல் புகார்களில் 3 புகார்களில் மட்டும் தான் FIR போடப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் புகார்களில் மிகவும் முக்கியமானது அதிமுக ஆட்சியில் நடந்த 2028 கோடி ரேஷன் கொள்முதல் ஊழல். இந்த ஊழல் குறித்து தெரிந்து கொள்ள https://youtu.be/IbJt7uADYsM இந்த காணொளியை பாருங்கள். அடுத்ததாக ஏழை மக்களுக்கு அதிமுக ஆட்சியில் புளியந்தோப்பு KP Park பகுதியில் கட்டி கொடுக்கப்பட்ட தரமற்ற வீடுகள் பற்றியது. இந்த புகார் பற்றி அறிந்து கொள்ள https://youtu.be/c7ct14h6yXU இந்த காணொளி பாருங்கள். இது போன்ற அறப்போர் கொடுத்த மேலும் பல புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறையை நடவடிக்கை எடுக்க வைப்பது தான் இனி நமது வேலை.
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கூண்டுக்கிளியாக செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறையை மக்களுக்காகவும், ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் செயல்பட வைக்க வேண்டியது நமது வேலை.
அறப்போர் இயக்கத்துடன் இணைந்து செயல்பட உங்களையும் அழைக்கிறோம். இது வரை ஈமெயில் மூலம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கோரிக்கை வைக்காதவர்கள் இந்த இணைப்பின் https://arappor.org/send-email-to-dvac-wake-up-dvac/ மூலம் இன்றே உங்கள் பங்களிப்பை செய்து விடுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அறப்போர் நன்கொடை இணைப்பை பயன்படுத்தி இயக்க பயணிகளை ஆதரிக்க உங்களால் இயன்ற நன்கொடை அளியுங்கள். மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை நன்கொடை அளித்து இயக்க பணிகளை ஆதரிக்க உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். அறப்போர் இயக்கத்தின் பணிகளின் தொகுப்பை தொடர்ந்து உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ள இன்றே Subscribe செய்யுங்கள்.