செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தொகுதியிலுள்ள பம்மல் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த மூங்கில் ஏரி ஆக்கிரமிப்புகளால் சுருங்கி சுருங்கி கடைசியில் சில சதுர அடி பரப்பளவில் மீதம் இருந்தது. நாங்க அங்கே தான் குப்பைகளை கொட்டுவோம் என்று நகராட்சி நிர்வாகம் கிளம்பி வரவே தகவல் கிடைத்த அறப்போர் இயக்கம் கடந்த 2018ம் வருடத்தில் பொதுநல வழக்கு (W.P.No.9628 of 2018 and C.M.P.No.11548 of 2018) தொடர்ந்து ஏரியில் குப்பை கொட்டும் திட்டத்தை தடுத்து மீண்டும் அந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் மூலம் பெற்றது.
இரண்டு வருடங்களாக எந்த வேலையும் செய்யாமல் அமைதி காத்த நகராட்சி தற்பொழுது புதிதாக ஏரிக்குள் பூமி பூஜை செய்து குடிசை போட்டு கட்டிட வேலையை துவங்கும் ஆக்கிரமிப்பாளர்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. பல்லாவரம் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட செங்கல்பட்டு ஆட்சியர் விரைவாக செயல்பட்டு மூங்கில் ஏரியின் மிச்ச சொச்ச பகுதியை மீட்டு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கிறோம்.
அந்த பகுதி MLA, MP மற்றும் இதர கட்சி தலைவர்கள் இந்த ஏரியை பார்வையிட்டு ஏரியின்வாயிலை அடைத்து போடப்பட்டுள்ள உங்கள் கொடி கம்பங்களை நீக்குமாறு அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.