Parandur Land Registration Scam – Minister P Moorthy Responds


செய்தி குறிப்பு:

*சென்னை புதிய விமான நிலையம் அமையவுள்ள காஞ்சிபுரம் வட்டம் பரந்தூர் அ   கிராமத்தில் உயர் மதிப்பில் பதிவான ஆவணம் குறித்து ஊடகங்களில் வந்த செய்தி குறித்த உண்மை நிலை*

*வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. மூர்த்தி அறிக்கை*

சென்னை புதிய விமான நிலையம் அமையவுள்ள காஞ்சிபுரம் வட்டம் பரந்தூர் அ   கிராமத்தில் காஞ்சிபுரம் 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 2976/2020, 2977/ 2020, 2978/2020, 2979/2020 என்ற எண்கள் கொண்ட ஆவணங்களின் மூலம் பிரகாஷ் சில்க்ஸ் அண்ட் சாரீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு தனி நபர்களால் 19-3-2020 அன்று கிரய ஆவணங்கள் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல சர்வே எண்களில் அடங்கிய சுமார் 73 ஏக்கரில் 1.17 ஏக்கர் நிலம் என கிரயம் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சர்வே எண்களில் வழிகாட்டி மதிப்பு அதிக பட்சம் ஏக்கர்  ரூ 11,39,000/- என உள்ள நிலையில் இவ்வாவணங்களில் சதுர அடி ரூ 150/- என்ற மதிப்பு (ஏக்கர் ரூ 65,40,000/- ) அனுசரிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரயம் செய்யப்பட்ட ஏக்கர் 1.17 நிலம் எந்த சர்வே எண்களில் கட்டுப்பட்டது என குறிப்பிடப்படவில்லை. ஆகவே சென்னை விமான நிலையம் எதிர்காலத்தில் அமைக்கப்பட்டால் அரசிடமிருந்து அதிக இழப்பீட்டுத் தொகை பெறும் நோக்கில் இவ்வாவணங்கள் பதியப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு வர வலுவான முகாந்திரம் உள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்தும் 2020 ஆம் ஆண்டு அதாவது முந்தைய ஆட்சிக் காலத்தில் எழுதி பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆவணங்களைப் பதிந்த பதிவு அலுவலர் தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அதற்கு உதவிய ஓர் உயர் அலுவலர் மீது இந்நேர்வு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறைக்கு ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இப்போது இதே நேர்வை மேற்கோள் காட்டி சென்னை விமான நிலையம் அமைய நிலம் கையகப்படுத்தும்போது இவ்வாறு அதிக மதிப்பில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மிக அதிக அளவிலான இழப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்களில் சொல்லப்பட்டுள்ளது தவறானதாகும்.
அரசுக்கு நிலம் கையகப்படுத்தப்படும் நேர்வுகளில் இது போன்ற அதிக மதிப்புடைய ஆவணங்கள் பகட்டு மதிப்பு ஆவணங்கள் என வகைப்படுத்தப்பட்டு அவற்றின் மதிப்பு இழப்பீடு வழங்க அடிப்படை மதிப்பாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
அரசுக்கு இழப்பு ஏற்படாத வகையிலும் நில உடமையாளர்களுக்கு உரிய மற்றும் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுக்கு நில எடுப்பு செய்யப்படும் இனங்களில் சரியான சந்தை மதிப்பு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டு அக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டு நில நிர்வாக ஆணையர் தலைமையில் இயங்கும் மாநில அளவிலான குழுவால் சரிபார்க்கப்பட்டு அரசால் சரியான மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகள் மற்றும் நில உடமைதாரர்கள் பாதிக்கப்படாதவாறு ஏற்ற வகையிலான இழப்பீடு வழங்கப்படும்.

மேலும் மாநிலத்தில் எந்த ஒரு நிலத்தின் மதிப்பையும் சரி செய்ய பதிவு துறை தலைவர் தலைமையிலான மைய வழிகாட்டு குழுவுக்கு அதிகாரம் உண்டு.
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டில் அதாவது கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு ஆவணப் பதிவினைக் காரணம் காட்டி தற்போது அமையவிருக்கும் விமான நிலையத்திற்கு செய்யப்பட உள்ள நில எடுப்புக்கு மிக அதிக அளவில் அரசு பணத்தைக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பரப்பப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானதாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விமான நிலையம் அமைய நிலம் வழங்க இருக்கும் விவசாயிகள் மற்றும் நில உடமைதாரர்களுக்கு உரிய மற்றும் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை வழங்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.


Subscribe For Arappor Latest Blog Updates
We will send Latest Blog Post to your Email...!!!

Support Arappor Iyakkam

Together, we can build a just and equitable society.

Donate Once

Donate Monthly

Comments :

1 thought on “Parandur Land Registration Scam – Minister P Moorthy Responds”

  1. அந்த ஓர் உயர் அலுவலர் எப்போது பணி இடைநீக்கம் செய்யப்படுவார்

    Reply

Leave a Comment