Govt land Grabbing - St. Thomas Mount



Download Complaint and Annexure

அறப்போர் பத்திரிக்கை செய்தி

அமைச்சர் திரு ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலமாக ரூ 411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு

அமைச்சர் திரு ராஜ கண்ணப்பன் அவர்கள் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூபாய் 411 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதை குறித்தும் தன்னுடைய அதிகாரத்தை இன்று வரை துஷ்பிரயோகம் செய்து அந்த அரசு நிலத்தை தன்னுடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் இன்றைய தினம் புகாராக லஞ்ச ஒழிப்பு துறை, முதல்வர் துணை முதல்வர் தலைமைச் செயலர் வருவாய் துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ளோம். இந்த அரசு நிலம் உடனடியாக மீட்கப்பட்டு அமைச்சர் திரு ராஜ கண்ணப்பன் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து பொது ஊழியர்கள் மீதும் FIR பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி உள்ளோம்.

இந்த அரசு நிலம் ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவிற்கும் நங்கநல்லூர் மெட்ரோவிற்கு இடையே BSNL அலுவலகத்திற்கு அடுத்தபடி உள்ள பரங்கிமலை கிராமம் சர்வே எண் 1353 எண் 12, GST சாலை. இந்த நிலம் அரசு நிலம் தான் என்பதற்கான வருவாய்த்துறை பதிவேடு நகலை புகாருடன் இணைத்துள்ளோம். சர்வே எண் 1353 என்பது 4 ஏக்கர் 31,378 சதுர அடி கொண்டது மற்றும் சர்வே எண் 1352 என்பது 12964 சதுர அடி கொண்டது. இவை இரண்டும் புறம்போக்கு நிலங்கள் என்று வருவாய்த்துறை பதிவேட்டில் உள்ள ஆதாரங்களை புகாருடன் இணைத்துள்ளோம்.

முக்கியமாக 2015 இல் ஆலந்தூர் தாசில்தார் சென்னை தெற்கு இணை அலுவலகம் இரண்டு சார் பதிவாளர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் சர்வே எண் 1353, 1352 மற்றும் பல சர்வே எண்கள் அரசின் காலம் கடந்த குத்தகை நிலங்கள் என்றும் இந்த நிலங்கள் தற்பொழுது அரசு நிலங்கள் என்றும் இந்த சர்வே எண்களில் எந்தவிதமான பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என்றும் இதற்கு முன்பாக யாராவது செய்திருந்தால் அதை ரத்து செய்து தாசில்தாருக்கு அறிக்கை அனுப்பும் படி கேட்டுள்ளார். பரங்கிமலை கிராமத்தில் உள்ள பெரும்பாலான அரசு நிலங்கள் பிரிட்டிஷ் ஆட்சி செய்த பொழுது சிலருக்கு குத்தகை கொடுத்து பிறகு சுதந்திரம் அடைந்ததும் இந்த நிலங்கள் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டில் வந்தது.

டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர்களாக இருப்பவர்கள் அமைச்சர் திரு ராஜ கண்ணப்பனின் மகன்கள் பிரபு ,திவாகர் மற்றும் திலீப் குமார். மேலும் இவர்கள் மூவரும் தான் இந்த நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்களாகவும் உள்ளனர்.

சர்வே எண் 1353 மற்றும் சர்வே எண் 1352 நிலங்களை அபகரிப்பதற்காக இந்த நிறுவனம் 1991 முதல் 2018 வரை பல பத்திரபதிவுகளை செய்துள்ளது. 4.52 ஏக்கர் அளவிற்கு பத்திரபதிவு செய்ததற்கான ஆதாரங்களை புகார் உடன் இணைத்து இருக்கிறோம். 1990களில் காதியா பெயரில் இருந்த இந்த டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட் ராஜ கண்ணப்பனின் மகன்கள் பெயருக்கு மாறுகிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மூன்று மகன்கள் தான் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள்.

முக்கியமாக 2015-ல் ஆலந்தூர் தாசில்தார் இந்த சர்வே எண்ணில் எந்த பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று தெரிவித்த பின்பும் மற்றும் இதற்கு முன்பாக பதிவு செய்தவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று சொன்ன பிறகும் அந்த பத்திரப்பதிவுகள் எதுவும் இன்றுவரை ரத்து செய்யவில்லை. இந்த கடிதத்திற்கு பிறகும் கூட 2018ல் இந்த நிலத்தை ஏழு லட்சத்திற்கு அடகில் இருந்து மீட்டது போல் டெக்கான் ஃபன் ஐலண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட் பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரப்பதிவின் பொழுது அமைச்சர் ராஜகன்னப்பனின் மகன்கள் தான் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் இயக்குனர்கள்.

கடந்த ஆண்டு 1352 சர்வே எண்ணில் உள்ள 12984 சதுர அடி நிலம் மீட்கப்பட்டதாக அதன் வாசலில் வட்டாட்சியர் பல்லாவரம் பலகை வைத்துள்ளார். ஆனால் அதற்கு அருகிலேயே உள்ள கிட்டத்தட்ட 4.75 ஏக்கர் அளவிற்கு அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சர்வே எண் 1353 அரசு நிலங்களை இன்று வரை மீட்கவில்லை.

அரசு வழிகாட்டி மதிப்பு படி பார்த்தால் இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 1 சதுரடிக்கு ரூ 11000 ஆகும். எனவே 205618 சதுரடி நிலத்தின் மதிப்பு ரூ 226 கோடி ஆகும். இந்த இடத்தில் சந்தை மதிப்பு குறைந்த பட்சம் 1 சதுரடிக்கு ரூ 20000 ஆகும். இதன் படி இன்றைய மதிப்பு ரூ 411 கோடி ஆகும்.

அமைச்சர் திரு ராஜ கண்ணப்பனின் அழுத்தத்தினால் வருவாய்த்துறை இந்த நிலத்தை மீட்காமல் உள்ளது என்று அறிகிறோம். அமைச்சர் திரு ராஜ கண்ணப்பன் தன் மகன்கள் பெயரில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் சொத்து சேர்ப்பதற்காக தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சொத்துக்களை சேர்த்து உள்ளார் என்று தெரிகிறது. இந்த நிலத்தை உடனடியாக அரசு மீட்க வேண்டும். அரசு நிலத்தை பத்திரப்பதிவு செய்வது சட்டவிரோதமாக இருந்தாலும் அதை தொடர்ந்து இந்த நிறுவனம் செய்து வந்துள்ளது. எனவே அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவரது மகன்கள் மற்றும் இதை மீட்டெடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்த அதிகாரிகள் போன்றோர் மீது உடனடியாக FIR பதிவு செய்து விசாரிக்கும் படி அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

Download Complaint and Annexure


Subscribe For Arappor Latest Blog Updates
We will send Latest Blog Post to your Email...!!!

Support Arappor Iyakkam

Together, we can build a just and equitable society.

Donate Once

Donate Monthly

Comments :

1 thought on “Govt land Grabbing - St. Thomas Mount”

  1. My brother and his wife are trying to grab about 10 acres partnership firm’s property.
    They have made illegal changes in the patta already. What should I do?

    Reply

Leave a Comment