தமிழ்நாடு மின்கட்டணம் தொடர்பாக DIPR வெளியிட்ட பொய் செய்திக்கு அறப்போர் இயக்கத்தின் அறிக்கை வெளியீடு
டிசம்பர் 16, 2024 அன்று தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூரவ செய்தி தொடர்பு துறை தமிழ்நாடு மின் கட்டணம் குறித்த ஒரு அப்பட்டமான பொய் செய்தியை வெளியிட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் வீட்டுக்கு விநியோகம் செய்யும் மின்சார கட்டினம் குறைவாக உள்ளதாக DIPR வெளியிட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதும் ஒரு முழு பூசணிக்காயை மறைக்க தமிழ்நாடு அரசு எடுத்த அப்பட்டமான முயற்சி இது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். அந்த செய்தி உடனடியாக பல ஊடகங்களிலும் செய்திதாள்களிலும் இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் குறைந்த மின்கட்டணம் போல செய்தி வெளியிடப்பட்டது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அறப்போர் இயக்கம் மின்சார கட்டணத்தில் ஒவ்வொரு பிரிவிலும் தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்பதற்கான விரிவான ஆய்வறிக்கையை இத்துடன் வெளியிடுகிறோம்.
DIPR தன் செய்தி வெளியீட்டில் இது திமுகவோ அரசோ சொல்லவில்லை என்றும் அரவிந்த் வாரியார் என்னும் ஆய்வாளர் சொன்னதாகவும் தெரிவித்து இருந்தனர். அரவிந்த் வாரியார் என்பவர் X தளத்தில் கிட்டத்தட்ட 4000 பேர் பின்பற்றும் கேரளாவை சேர்ந்த ஆசிரியர் என்பதும் இது போல அரசு தகவல்களை தொகுத்து அவர் பக்கத்தில் போடுவதும் தெரிந்தது. அதில் அவர் 100 யூனிட் வரை பயன்படுத்தும் வீட்டு விநியோகம் மின் கட்டணம் தொடர்பாக மட்டுமே தமிழ்நாடு குறைவான கட்டணம் என்பதை தெரிவித்து இருந்தார். ஆனால் அதை திரித்து இந்தியாவிலேயே வீட்டு விநியோக மின் கட்டணங்களில் தமிழ்நாடு தான் குறைந்தது என்று DIPR வெளியிட்டுள்ளார்கள்.
வீட்டு விநியோக மின்சாரத்தை பொறுத்தவரை மாதம் 100 யூனிட் வரை பயன்படுத்தும் பிரிவில் மட்டுமே தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. மற்ற எந்த பிரிவிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லை. மாறாக மாதம் 800, 1000 யூனிட் பயன்படுத்தும் பிரிவுகளில் மிக அதிக கட்டினம் வசூலிக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. இந்த பிரிவுகளில் நம்மைவிட கிட்டத்தட்ட 29 மாநிலங்களில் மின்கட்டணம் குறைவாக உள்ளது.
மேலும் 100 யூனிட் தவிர அனைத்து பிரிவுகளிலும் மின் கட்டண தரவரிசையில் தமிழ்நாடு சரிந்து வருகிறது. மாதம் 200 யூனிட் பயன்படுத்துபவர்கள் மின்கட்டணத்தில் 2019-20இல் 4வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2023 இல் 9 வது இடத்திற்கு சரிந்தது. முதல் ரேங்க் என்பது குறைவான மின் கட்டணம். மின் கட்டணம் ஏற ஏற நாம் மற்ற மாநிலங்களை விட தரவரிசையில் கீழே சென்று கொண்டு உள்ளோம்.
மாதம் 400 யூனிட் பயன்படுத்துபவர்கள் மின்கட்டணத்தில் 2019-20இல் 12வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2023 இல் 18 வது இடத்திற்கு சரிந்தது. தமிழ்நாட்டில் இந்த பிரிவில் உள்ளவர்கள் யூனிட்டுக்கு ரூ 5.69 கட்டுகிறார்கள்.
மாதம் 600 யூனிட் பயன்படுத்துபவர்கள் மின்கட்டணத்தில் 2019-20இல் 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2023 இல் 24 வது இடத்திற்கு சரிந்தது. தமிழ்நாட்டில் இந்த பிரிவில் உள்ளவர்கள் யூனிட்டுக்கு ரூ 7.29 கட்டுகிறார்கள்.
மாதம் 800 யூனிட் பயன்படுத்துபவர்கள் மின்கட்டணத்தில் 2019-20இல் 15வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2023 இல் 29வது இடத்திற்கு சரிந்தது. தமிழ்நாட்டில் இந்த பிரிவில் உள்ளவர்கள் யூனிட்டுக்கு ரூ 8.22 கட்டுகிறார்கள்.
மாதம் 1000 யூனிட் பயன்படுத்துபவர்கள் மின்கட்டணத்தில் 2019-20இல் 16வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2023 இல் 30 வது இடத்திற்கு சரிந்தது. தமிழ்நாட்டில் இந்த பிரிவில் உள்ளவர்கள் யூனிட்டுக்கு ரூ 8.78 கட்டுகிறார்கள்.
உண்மை இப்படி இருக்க தமிழ்நாட்டின் செய்தி தொடர்பு துறை தமிழ்நாட்டில் 1௦௦ யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் சராசரியாக ரூ 113 ருபாய் தான் மின் கட்டணமாக செலுத்துகிறார்கள் என்று ஒரு மிகப்பெரிய பொய்யை சொல்லி உள்ளது.
மேலும் நமது ஆய்வறிக்கையில் மற்ற பிரிவுகளான கமெர்ஷியல், சிறு, நடு மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் பிரிவுகள், விவசாயம் போன்றவற்றையும் ஆய்வு செய்துள்ளோம்.
அனைத்து கமெர்ஷியல் பிரிவுகளிலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக கட்டணம் வசூல் செய்யும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. முக்கியமாக பெட்டிக்கடை போல மாதத்திற்கு வெறும் 300 யூனிட் பயன்படுத்தக்கூடிய பிரிவில் தமிழ்நாடு இந்தியாவிலியே மிக அதிகமான கட்டணத்தை வசூல் செய்யும் மாநிலமாக உள்ளது. தரவரிசையில் 37வது அதாவது கடைசி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதே போல மற்ற கமெர்ஷியல் பிரிவுகளிலும் அதாவது மாதத்திற்கு 750, 1500, 3000, 4500, 6000, 7500 யூனிட் பயன்படுத்தும் பிரிவுகளிலும் தமிழ்நாடு மிக அதிக கட்டணம் வசூலிக்கும் மாநிலமாக உள்ளது. தரவரிசையில் 30 முதல் 37வது இடத்தில் தான் உள்ளோம். கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் தரவரிசையில் தமிழ்நாடு சரிந்து கொண்டே போவதை கீழே காணலாம்.
இதே போல நடுத்தர தொழில் நிறுவனங்கள் (medium industries) பிரிவுகளிலும் தமிழ்நாடு அதிக மின் கட்டணம் வசூல் செய்யும் மாநிலமாக உள்ளது. இந்த பிரிவிலும் தமிழ்நாடு வேகமாக சரிந்து 27 மற்றும் 30 வது இடங்களில் உள்ளது.
விவசாய மின் இணைப்பு பிரிவுகளில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் எந்த மின்கட்டணமும் இல்லை. இந்த பிரிவுகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
பெரு நிறுவனங்கள் பிரிவுகளிலும் தரைவரிசையில் 19 முதல் 25 வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு இத்துடன் சேர்த்து இணைத்துள்ள அறப்போரின் ஆய்வறிக்கையை பார்க்கவும்.
இப்படி ஓரிரு பிரிவுகள் தவிர மற்ற அனைத்து பிரிவுகளிலும் தமிழ்நாடு அரசின் மின் கட்டணம் நாட்டிலேயே மிக அதிகமாக வசூல் செய்யும் மாநிலங்களில் ஒன்றாக இருந்தும் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே வீடு விநியோக மின்கட்டணத்தில் குறைவானது என்று உண்மைக்கு புறம்பாக DIPR பத்திரிகை செய்தி வெளியிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே மின் கட்டணத்தால் அவதி படும் மக்களின் வெந்த புண்களில் வேலை பாயக்கும் செயல் ஆகும். மேலும் இந்த ஆய்வு 2023 வரையில் தான். இந்த வருடம் மீண்டும் மின்கட்டணம் உயர்வு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு நிலக்கரி இறக்குமதி போன்ற ஊழலால் இழந்த பணத்தை அதானி போன்ற ஊழல்வாதிகளிடம் இருந்து மீட்க வேண்டும். தமிழ்நாடு அரசின் நிர்வாக திறமையின்மையாலும் ஊழலுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் திமுக அரசு உள்ளதாலும் ஊழலால் இழந்த பணத்தை ஊழல்வாதிகள் இடமிருந்து மீட்காமல் மக்கள் தலையில் மின்கட்டனமாக வைக்கிறார்கள். இதை கண்டித்து அறப்போர் இயக்கம் வருகிற ஜனவரி 5 காலை 9.30 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம். தமிழ்நாடு அரசு உடனடியாக மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
– அறப்போர் இயக்கம்