தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவது எப்படி?
தகவல் பெறும் உரிமை சட்டம் – ஒரு அறிமுகம்:
தகவல் பெறும் உரிமை சட்டம் ஒரு சாதாரண மனிதனுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கருவி. இன்று நம் நாட்டில் ஊழலும் அதிகார முறைகேடுகளும் பெரிய அளவில் பரவி அது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த அதிகார முறைகேடுகளையும், ஊழல்களையும் பெரியளவில் வெளிக் கொண்டுவரும் கருவியாகவும், சாதாரண மனிதர்களின் உரிமைகளை இலஞ்சம் கொடுக்காமல் மீட்டெடுக்கும் கருவியாகவும் தகவல் பெறும் உரிமை சட்டம் உருவெடுத்துள்ளது. ஒரு கூலி விவசாயி தனக்கு கிடைக்க வேண்டிய நூறு நாள் வேலை பற்றிய தகவல் முதல் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் பல பெரிய ஊழல்கள் பற்றிய தகவல்கள் வரை வெளிக்கொண்டு வந்துள்ளது இந்த சட்டம். தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்த விரும்புவர்களுக்கான ஒரு அறிமுகம் தான் இந்த கையேடு.
தகவல் பெறும் உரிமை சட்டம் என்றால் என்ன?
மே 11, 2005 அன்று நமது பாராளுமன்றம் தகவல் பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றியது. நமது அரசியல் சாசனத்தில் ஒவ்வொருவரும் வாழ்வதற்கான உரிமையும் பேச்சுரிமையும் அடிப்படை உரிமைகளாக வழங்கப்பட்டு உள்ளன. ஆனால் அவை நிறைவேற நம் ஒவ்வொருவரிடமும் நமக்கு தேவையான தகவல்கள் இருக்கவேண்டும். தகவல் பெறும் உரிமை சட்டம் இந்த அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட தேவைப்படும் சட்டமாக அமைக்கப்பட்டது. இந்த சட்டம் இந்தியாவின் எந்த ஒரு குடிமகனும் அரசாங்க அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்க ஆவணங்கள் பற்றிய தகவல்களை கேட்டுப் பெறுவதற்கான உரிமையை வழங்கியுள்ளது.
எந்தெந்த தகவலை நாம் இந்த சட்டம் மூலம் பெற முடியும்?
அரசாங்க தகவல் என்பது பல வடிவங்களில் இருக்கலாம். பதிவேடுகள், சுற்றறிக்ககைள், ஆலோசனைகள், அறிக்கைகள். செய்தி வெளியீடுகள், அரசு ஆணைகள், ஒப்பந்தங்கள், குறிப்பேடுகள், தாள்கள், உருப்படிகள் மற்றும் மின்னனு வடிவத்தில் உள்ள அரசு செயல்பாடுகள் குறித்த தகவல்கள் அனைத்தையும் இந்த சட்டத்தின் மூலம் பெறலாம். இந்த சட்டத்தின் படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தெரிந்துகொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
எந்தெந்த தகவலை நாம் இந்த சட்டம் மூலம் பெற முடியாது?
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய தகவல்களை பெறமுடியாது. நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்ட தகவல்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற சிறப்புரிமையை மீறக்கூடிய தகவல்கள், தனிநபர்களின் வாழ்க்கைக்கு, உடல் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய தகவல்கள், வணிக ரகசியங்கள், போன்றவை இந்த சட்டம் மூலம் பெறமுடியாது.
தகவல் கேட்கும் முறை என்ன? யாரிடம் கேட்க வேண்டும்?
ஒவ்வொரு அரசு துறையிலும் ஒரு பொது தகவல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். எந்த துறையிலிருந்து தகவல் வேண்டுமோ அந்த துறை பொது தகவல் அலுவலரிடம் அடுத்த பக்கத்தில் உள்ள மாதிரிபோல் ஒரு கடிதம் அனுப்பவேண்டும். கடிதத்தை தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம். இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ 10 மட்டும்.
கட்டணத்தை செலுத்தும் முறை என்ன?
மாநில அரசு தொடர்பான தகவல்கள் பெற மாநிலத் துறைக்கு விண்ணப்பிக்கும் போது ரூ 10 க்கான நீதிமன்ற வில்லை (கோர்ட் பீஸ் ஸ்டாம்ப்) ஒட்டலாம் அல்லது பொது தகவல் அதிகாரி, _____________ அலுவலகம் என்ற பெயரில் ரூ 10 வங்கி வரைவோலை (DD) எடுத்து அனுப்பலாம்.
மத்திய அரசுக்கு விண்ணப்பிக்கும் போது ரூ 10 க்கு (DD) அல்லது போஸ்டல் ஆர்டர் மட்டுமே அனுப்பவேண்டும். மத்திய அரசுக்கு கீழ்கண்ட பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும். Account Officer, officer of ________ (dept name) என்ற தலைப்பில் டி.டி (அ) போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும்.
நாம் கேட்ட தகவலுக்கு 10 ரூ. தவிர, வேறு கட்டணம் செலுத்த வேண்டுமா?
கேட்ட தகவலுக்கு நகல் எடுக்க வேண்டியிருப்பின் 1 பக்கத்திற்கு ரூ 2 செலுத்தவேண்டும். ஆவணத்தை நேரில் பார்வையிட முதல் 1 மணி நேரத்திற்கு இலவசம், அடுத்து ஒவ்வொரு மணிக்கும் ரூ 5 செலுத்தவேண்டும். பொருள் மாதிரி உருவ மாதிரிக்கு அசல் கட்டணம் செலுத்தவேண்டும். CD ஒன்றுக்கு ரூ 50 செலுத்தவேண்டும்.
விண்ணப்பத்தை எப்படி அனுப்ப வேண்டும்?
விண்ணப்பத்தை ஏற்புச்சான்றுடன் கூடிய பதிவுத்தபாலில் அனுப்புவதே சிறந்தது. அப்படி அனுப்புவதன் மூலம் சம்மந்தபட்ட அதிகாரி அதைப் பெற்றுக்கொண்டார் என்ற ஆதாரம் நம்மிடம் இருக்கும்.
தகவல்கள் எந்த காரணத்திற்காக கேட்கப்படுகிறது என்று குறிப்பிட வேண்டுமா?
சட்டப்படி விண்ணப்பம் செய்யும் ஒருவர் எந்த காரணத்திற்காக தகவல் கேட்கிறார்கள் என்பதை குறிப்பிட தேவையில்லை. அந்த தகவலை கொடுப்பவர்களும் காரணத்தை கேட்கக் கூடாது.
தகவல் எத்தனை நாட்களுக்குள் தரப்பட வேண்டும். தராவிட்டால் என்ன செய்யவேண்டும்?
விண்ணப்பம் பொது தகவல் அதிகாரியிடம் சென்றடைந்ததிலிருந்து 30 நாட்களுக்குள் தரப்பட வேண்டும். அப்படி தராத பட்சத்தில் அதே துறையின் மேல்முறையீட்டு அலுவலருக்கு 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவேண்டும். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. பின்வரும் மாதிரியை பார்க்கவம். அதனுடன் ஏற்கனவே விண்ணப்பித்த நகலையும் இணைக்க வேண்டும். ஒரு வேளை 30 நாட்களுக்குள் பதில் கிடைத்து அதில் திருப்தி இல்லை என்றாலோ, கேட்ட தகவல் இல்லை என்றாலோ மேல் முறையீடு செய்யலாம். 30 நாட்களுக்கு மேல் ஆனதால் தேவைப்படும் தகவல் நகல்களுக்கான கட்டணம் செலுத்த தேவையில்லை. இலவசமாகவே தரப்படவேண்டும்.
தகவல் பெறும் உரிமைசட்ட முதல் மேல்முறையீட்டு விண்ணப்பம் மாதிரி
முதல் மேல் முறையீட்டிலும் பதில் வரவில்லை என்றால் என்ன செய்யவேண்டும்?
முதல் மேல் முறையீடு செய்து 30 நாட்களுக்குள் தகவல் அனுப்பப்பட வேண்டும். அப்படி அனுப்பவில்லை என்றாலோ, பதில் திருப்தி இல்லை என்றாலோ தகவல் ஆணையத்திடம் 90 நாட்களுக்குள் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம். இதற்கு கட்டணம் இல்லை. இதன் மாதிரியை அடுத்தப் பக்கத்தில் பார்ககலாம்.
இரண்டாவது மேல்முறையீடு யாரிடம் செய்ய வேண்டும்?
மாநில துறையிடம் இருந்து தகவல் கேட்டிருந்தால், மாநில தகவல் ஆணையத்திற்கு மேல்முறையீடு செய்யவேண்டும். மத்திய துறையிடம் இருந்து தகவல் கேட்டிருந்தால் மத்திய தகவல் ஆணையத்திற்கு மேல்முறையீடு செய்யவேண்டும்.
மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:
CENTRAL INFORMATION COMMISSION, 2 nd FLOOR, AUGUST KRANTI BHAVAN, NEW DELHI-110066 PH: 011-26161137.
மாநில தகவல் ஆணையத்தின் முகவரியை இரண்டாம் மேல்முறையீடு மாதிரியில் பார்க்கலாம்.
இரண்டாவது மேல்முறையீட்டு விண்ணப்பம் மாதிரி
இரண்டாவது மேல்முறையீடு செய்த பின் என்ன செய்யவேண்டும்.?
தகவல் ஆணையம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் விண்ணப்பித்தாரரையும் அழைத்து விசாரணை செய்வார்கள். ஒரு உரிமையியல்(சிவில்) நீதிமன்றத்திற்குரிய அதிகாரங்கள் ஆணையத்திற்கு உண்டு. கேட்ட தகவலை பொது தகவல் அதிகாரி மனுதாரருக்குத் தர உத்தரவிடுவார்கள். அது மட்டுமின்றி பொது தகவல் அதிகாரி தவறு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டால் தாமதமான நாளொன்றுக்கு ரூ 250 வீதம் அதிகபட்சமாக அவருக்கு ஆணையம் ரூ 25000 வரை அபராதம் விதிக்கலாம். இந்த அபராதம் அந்த தகவல் அலுவலரின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும்.
ஆவணங்களை பார்வையிட முடியுமா?
ஒரு சில நேரங்களில் நமக்கு தேவையான தகவல்களை குறிப்பிட்டு கேட்பது மிக கடினமாக இருக்கும். அல்லது நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் நிறைய பக்கங்கள் இருக்கும்போது அதற்கான நகல்களின் செலவு அதிகமாகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் நாம் ஆவணங்களை பார்வையிட விண்ணப்பிக்கலாம். அவர்கள் பதில் குறிப்பிடும் தேதி அன்று நாம் சென்று ஆவணங்களை பார்வையிடலாம்.