7.png சென்னையின் 200 வார்ட்களிலும் மக்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறிய அரங்கங்களில் 50 முதல் 200 பேர் வரை அழைத்து ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் அறப்போர் இயக்கம் நடத்தி வந்தது. ஒவ்வொரு வாரமும் சென்னையின் நீர்நிலைகளை தன்னார்வலர்கள் ஆய்வு செய்தனர். 2019ம் வருடத்தில் சென்னையில் ஏற்பட்ட கடும் தண்ணீர் பஞ்சத்திற்கு தீர்வு காண அரசுக்கு அழுத்தம் தர சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜூன் 30 2019 அன்று 'கேளு சென்னை கேளு' என்ற அமைதியான போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அனுமதி தராமல் இழுத்தடிக்கப்படுகிறது . காரணம் கேட்டு அன்றைய சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அவர்களை சந்தித்த போது நீங்கள் ஏன் அமைச்சர் வேலுமணியுடன் சமரசமாக போக கூடாது என்று கேட்கிறார். அவரை சந்தித்து பிரச்சனைகளை தீர்க்க சொல்கிறார். மாநகராட்சி டெண்டர்களில் ஊழல் செய்யும் அமைச்சருடன் நாங்க ஏன் சார் சமரசமா போகணும் என்று மறுக்கிறோம்.

இந்த சந்திப்புக்கு பிறகு வள்ளுவர் கோட்ட நிகழ்விற்கு அனுமதி மறுக்கப்படுகிறது . நீதிமன்ற அனுமதியுடன் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் அதற்கு பிறகு சென்னையில் வாரா வாரம் நடத்தப்படும் Know Your Rights நிகழ்வுகள் நடத்த புக் செய்யப்படும் அரங்குகளின் உரிமையாளர்கள் காவல்துறையால் எச்சரிக்கப்படுகின்றனர். நேரடியாக மிரட்டப்பட்டனர். அப்படியே மீறி கூட்டத்தை நடத்த ஒன்று கூடினால் வாசலில் ஏராளமான காவல்துறையினரை நிறுத்தி கூட்டதிற்கு வரும் பொதுமக்களை விரட்டி விட்டனர். நீர்நிலைகளை ஆய்வு செய்ய போகும் இடங்களில் எங்களுக்கு முன்பாகவே காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஆய்வுக்கு வரும் தன்னார்வலர்கள் மீது விசித்திரமான பொய் வழக்குகள் புனையப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு அனைத்து காவல் நிலையங்களிலும் ஒரே பதில் தான் வருகிறது. "மேலிடத்து உத்தரவு"

இந்த விஸ்வநாதன் ஐபிஎஸ் தான் அறப்போர் இயக்கம் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அதற்கு தமிழக அரசும் அனுமதி கொடுத்துள்ளது. இது முழுக்க முழுக்க இயக்கத்தை மிரட்டி பார்க்கும் செயல். ஆனால் இதன் மூலம் ஒன்று தெளிவாக தெரிகிறது. அறப்போர் இயக்கம் வெளியிடும் ஊழல் ஆதாரங்கள் ஊழல்வாதிகளையும் தமிழக அரசையும் பயப்படுத்தி உள்ளது. அவர்கள் பதட்டப்பட ஆரம்பித்து இருக்கிறார்கள். அறப்போர் இயக்கம் தைரியமாக இந்த பொய் வழக்கை எதிர்கொள்ளும். தமிழக அரசின் மேலும் பல ஊழல்களை தொடர்ந்து வெளிக்கொண்டு வந்து ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம்

அறப்போர் தொடரும்..