அக்டோபர் 02, 2021 கிராம சபை நடந்தது எப்படி ?

I. தொகுப்புரை

அரசியல் சாசனத்தில் 73 வது திருத்தத்தின் மூலம் அதிகாரம் பெற்ற கிராம சபைகள் எப்படி செயல்படுகின்றது என்பதை புரிந்து கொள்ள அறப்போர் இயக்கம் இந்த ஆய்வை மேற்கொண்டது. வருடத்திற்கு குறைந்தபட்சம் 4 முறை நடக்க வேண்டிய கிராம சபை 20 மாதங்களாக நடக்காமல் முதன் முறையாக அக்டோபர் 02, 2021 அன்று நடந்தது. எனவே கிராம சபை முடிந்தவுடன் இணையவழியில் தமிழ்நாடு முழுவதும் எப்படி நடந்தது என கருத்து கேட்கப்பட்டது, 431 ஊராட்சிகளில் இருந்து 535 நபர்கள் அதன் உறுப்பினர்கள் ஆய்வில் பங்கேற்று பதில்களை தெரிவித்துள்ளனர்.

கிராம சபை விதிகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை என்பதும், பல ஊராட்சிகளில் அது வெறும் பெயரளவில் தான் நடத்தப்படுகிறது என்பதும், ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. 7 நாட்களுக்கு முன்பு கொடுக்கப்படவேண்டிய கிராம சபை குறித்த அறிவிப்பு பொது மக்களுக்கு கொடுக்கப்படவில்லை என 75% ஊராட்சிகளிலும், தீர்மான புத்தகம் கொண்டு வரவில்லை என 43% ஊராட்சிகளிலும், மக்கள் கூறும் பிரச்சனைகளை தீர்மான புத்தகத்தில் எழுதுவதில்லை என 59% ஊராட்சிகளிலும், வரவு செலவு படித்து காண்பிக்கப்படவில்லை என 63% ஊராட்சிகளிலும் தெரிவித்துள்ளனர், மேலும் பல தரவுகள் இந்த ஆய்வறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது. கிராம சபை நடைமுறைகளுக்கென எழுதப்பட்ட, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் அரசு ஆணை 1998, 2006, மற்றும் கிராமசபை குறித்த அறிவிப்புகள் 2006, 2008 என பல விதிகள் மீறி தமிழ்நாட்டில் அக்டோபர் 02, 2021 அன்று கிராம சபை நடந்துள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வின் மூலம் அரசுக்கு தெரிவித்துள்ள பரிந்துரைகளில் குறிப்பாக குறைந்த பட்சம் 7 நாட்களுக்கு முன்னதாக மக்களுக்கு அறிவிப்பும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவேண்டும் என்றும், கிராம சபை உறுப்பினர்கள் தரும் கோரிக்கைகள் தீர்மான புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்றும், மேலும் வெளிப்படைத்தன்மையுடன் நிதி, வரவு செலவு ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவேண்டும் என்றும் மிக முக்கியமாக இந்த கிராம சபைகளை ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அதன் உண்மையான நோக்கத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். எனவே அரசு அடுத்த கிராம சபையான ஜன 26,2022 அன்று இவற்றை நடைமுறை படுத்த இந்த ஆய்வு கேட்டுக்கொள்கிறது.

II. முன்னுரை:

ஜனநாயகத்தின் அடிப்படையான கிராம சபை குறித்து அறப்போர் இயக்கம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் 02, 2021 நடந்த கிராம சபைக்கு முன்பாக அது குறித்து இணைய வழி விழிப்புணர்வும் செய்யப்பட்டது,

2021 அக்டோபர் 02 அன்று நடந்த கிராமசபையில் கலந்து கொண்டவர்களிடம், கிராமசபை சட்டவிதிமுறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்டதா என அறிய இணையவழி ஆய்வை அறப்போர் மேற்கொண்டது,

III. ஆய்வு வழிமுறை

தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் இருந்து (சென்னை தவிர) இணையவழி ஆய்வில் பங்கேற்றனர், தேர்தல் நடந்த 9 மாவட்டங்களில் உள்ளவர்கள், அவர்களின் கடந்த கிராமசபை பற்றி தகவல்களை குறிப்பிட்டுள்ளனர்

கிராம சபை ஆய்வு விவரங்கள்

 • தரவுகள் பெறப்பட்ட நபர்கள் எண்ணிக்கை : 535
 • தரவுகள் பெறப்பட்ட கிராம ஊராட்சிகள் எண்ணிக்கை - 431

இந்த ஆய்வு இணையதளம் வழியாக அக்டோபர் 05 முதல் 09, 2021 வரை நடத்தப்பட்டது.

ஆய்வின் குறைபாடுகள்:

இந்த ஆய்வு புள்ளியல் முறையில் ராண்டம் வழியில் ஊராட்சிகளையோ மக்களையோ தேர்ந்தெடுத்து செய்யப்பட்ட ஆய்வு இல்லை. எனவே இது துல்லியமாக கிராம சபையின் நடைமுறைகளை கிராம சபை வாரியாகவோ ஒட்டு மொத்தமாகவோ கணக்கிடாது. சமூக வலைதளத்தில் இதை பார்த்து அந்தந்த ஊராட்சிகளில் இருந்து ஆர்வமுள்ளவர்கள் பங்கெடுத்துள்ளனர். எனவே இது நமக்கு ஒட்டு மொத்தமாக கிராம சபை நடைமுறையில் உள்ள பிரச்சனைகளை கண்டறியவும், தோராயமாக (Approximately) எத்தனை சதவீத ஊராட்சிகளில் இந்த பிரச்சனைகள் உள்ளது என்பதை புரிந்து கொள்ளவும் பயன்படும் ஆய்வு. இதை அறிவதன் மூலமாக நாம் அரசுக்கு 2 விஷயங்களை முன்வைக்கிறோம்.

 1. இந்த ஆய்வறிக்கையின் முடிவுகளை வைத்து அடுத்த கிராம சபையில் இந்த பிரச்சனைகள் எழாமல் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 2. அரசே ஒவ்வொரு கிராம சபையின் பொழுதும் அதை கண்காணிக்கும் வண்ணம் ஒரு சமூக தணிக்கை மற்றும் ஆய்வு செய்து பிரச்சனைகளை துல்லியமாக கண்டுபிடித்து அதை களைய வேண்டும். IV: கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் தரவுகள்

ஒரு கிராம சபை பின்பற்றவேண்டிய சட்ட விதிகள் படி தான் நடக்கிறதா என்பதை அறிய கிராம சபை குறித்த சட்டங்கள் மற்றும் விதிகள் வைத்து கேள்விகள் உருவாக்கப்பட்டது.

கிராம சபை விழிப்புணர்வு:

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் அரசு ஆணை நிலை எண் 150 ஊரக வளர்ச்சி துறை (சி1) (1998) விதி 3 ன் படி குறைந்த பட்சம் 7 நாட்களுக்கு முன்பாக தண்டோரா மூலம் பொது இடங்களில் அறிவிப்பு செய்து மக்களுக்கு கிராம சபை நடப்பது குறித்து தெரியப்படுத்த வேண்டும், அப்போது தான் அந்த கிராமத்தின் பெரும்பான்மையான மக்கள் பங்கேற்க வாய்ப்பு உண்டாகும். இந்த சட்டத்தின் படி, கிராம சபை பற்றிய அறிவிப்பு, செய்யப்பட்டதா என அறிய கீழ் காணும் கேள்வி கேட்கப்பட்டது

1. உங்கள் ஊராட்சியில் கிராம சபை குறித்த அறிவிப்பு 7 தினங்களுக்கு முன் கொடுக்கப்பட்டதா?

1.png

கிராம சபை பற்றிய அறிவிப்பு 7 தினங்களுக்கு முன் கொடுக்கப்படவில்லை என 391 அதாவது 75% கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை பற்றிய அறிவிப்பு 7 தினங்களுக்கு முன் கொடுக்கப்பட்டது என 132 அதாவது 25% கிராம ஊராட்சிகளிலும் பதிலளித்துள்ளனர்.

தீர்மான பதிவேடு:

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் அரசு ஆணை நிலை எண் 167 ஊரக வளர்ச்சி துறை (சி4) (1999), விதி 16 ன் படி பதிவேடு கொண்டுவரப்பட்டு, கிராம சபை நிகழ்வுகள் மற்றும் கருத்துகள் அனைத்தையும் பற்றாளர் (Presiding Officer) பதிவு செய்து, இறுதியாக எடுக்கும் முடிவை தீர்மானமாக பதிவேட்டில் எழுதி, கிராம சபை உறுப்பினர்கள் மத்தியில் படித்து காண்பித்து, பற்றாளர் கையொப்பம் இடவேண்டும். அனைத்து தீர்மானங்கள் பதிவிட்ட பிறகு கிராம சபை உறுப்பினர்கள் அனைவரிடமும் கையெழுத்து பெற வேண்டும். எனவே முதலில் கிராம சபைக்கு தீர்மான பதிவேடு கொண்டுவரப்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

2) கிராம சபையில் தீர்மான பதிவேடு கொண்டு வரப்பட்டதா?

5.png

தீர்மான பதிவேடு கொண்டு கொண்டு வரப்பட்டது என 283, அதாவது 57% கிராம ஊராட்சிகளிலும், தீர்மான பதிவேடு கொண்டு வரப்படவில்லை என்று 217, அதாவது 43% கிராம ஊராட்சிகளிலும் கூறியுள்ளனர்.

3) கிராம சபையில் பொது மக்களின் கோரிக்கைகளை தீர்மான பதிவேட்டில் பதிவு செய்தார்களா ?

9.png

மக்கள் கோரிக்கையை தீர்மான பதிவேட்டில் பதிவு செய்யவில்லை என 291, அதாவது 59% கிராம ஊராட்சிகளிலும், மக்கள் கோரிக்கையை தீர்மான பதிவேட்டில் பதிவு செய்தார்கள் என 204 அதாவது 41% கிராம ஊராட்சிகளிலும் கூறியுள்ளனர்.

வரவு - செலவு கணக்கு :

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, சட்டப்பிரிவு 3 மற்றும் அரசு ஆணை நிலை எண் 152 ஊரக வளர்ச்சி துறை (சி1) (1998), அறிவிப்பு 5 ன் படி, பஞ்சாயத்தின் ஆண்டு வரவு செலவு கணக்குகளை ஆய்வு (EXAMINE) செய்வது கிராம சபையின் பணியாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, சட்டப்பிரிவு 3 (2) படி, கடந்த ஆண்டுகளின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கைகளை கிராம சபையில் வைக்கப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். மேலும் அரசு ஆணை நிலை எண் 92 (1997) கிராம நிதி மற்றும் வரவு - செலவு பிரிவு 3 ன் கீழ் 6.4 படி வரும் ஆண்டு நிதி ஒதுக்கீடு ஒப்புதலும் கிராம சபையில் பெற வேண்டும்.

மேலும் அரசு ஆணை நிலை எண் 92 (1997) கிராம நிதி மற்றும் வரவு - செலவு பிரிவு 3 ன் கீழ் 7 மக்களுக்கு வெளிப்படையாக நிதி நிர்வாகம் இருப்பதை உறுதி செய்ய கூறியுள்ளது.

வெளிப்படைத்தன்மையுடன், கிராமசபையில் வரவு செலவு கணக்குகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகள் பார்வைக்கு வைக்கப்பட்டதா மற்றும் படித்து காண்பிக்கப்பட்டதா என அறிய கீழ் காணும் இரண்டு கேள்விகள் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

4) கிராம சபையில் வரவு - செலவு பதிவேடுகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதா?

6.png

வரவு - செலவு பதிவேடுகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை என 395, அதாவது 79% கிராம ஊராட்சிகளிலும், வரவு செலவு பதிவேடுகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது என 106 அதாவது 21% கிராம ஊராட்சிகளிலும், கூறியுள்ளனர்.

5) கிராம சபையில் வரவு-செலவு படித்து காண்பிக்கப்பட்டதா ?

7.png

வரவு - செலவு கணக்குகள் படித்து காண்பிக்கப்படவில்லை என 319, அதாவது 63% கிராம ஊராட்சிகளிலும், வரவு செலவு படித்து காண்பிக்கப்பட்டது என 184, அதாவது 37% கிராம ஊராட்சிகளிலும் கூறியுள்ளனர்.

உறவினர்கள் தலையீடு:

தமிழ்நாடு ஊராட்சிகளில் 50% பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக அல்லது உறுப்பினர்களாக இருக்கும் இடங்களில் அவரது உறவினர்கள் தலையீடு இருக்கிறதா என அறிய கீழ்க்காணும் கேள்வி கேட்கப்பட்டது.

6) கிராம சபையில், தலைவரின் / வார்டு உறுப்பினர்களின் - உறவினர்களின் தலையீடு இருந்ததா?

10.png

தலைவர் / வார்டு உறுப்பினர்களின், உறவினர்களின் தலையீடு இருந்தது என 246, அதாவது 50% கிராம ஊராட்சிகளிலும், தலைவர் / வார்டு உறுப்பினர்களின், உறவினர்களின் தலையீடு இல்லை என 245 அதாவது 50% கிராம ஊராட்சிகளிலும் கூறியுள்ளனர்.

இதை பற்றி புரிந்து கொள்ள உறவினர் தலையீடு உள்ளது என்று கூறியவர்களில் 20 ஊராட்சிகளுக்கு அழைத்து பேசப்பட்டது. அதே போல உறவினர் தலையீடு இல்லை என்று கூறியவர்களில் 20 ஊராட்சிகளுக்கு அழைத்து பேசப்பட்டது. உறவினர்கள் தலையீடு உள்ளது என்று கூறிய இடங்கள் அனைத்திலுமே பெண்கள் தலைவர்களாகவோ துணை தலைவர்களாகவோ இருந்தார்கள். அதே போல தலையீடு இல்லை என்று சொன்ன அனைத்து இடங்களிலும் ஆண்கள் தலைவர்களாகவும் துணை தலைவர்களாகவும் இருந்தார்கள்.

குறைவெண் வரம்பு:

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, சட்டப்பிரிவு 3 மற்றும் அரசு ஆணை நிலை எண் 130 ஊரக வளர்ச்சி துறை (சி4)(2006), விதி 4ன் படி குறைவெண் வரம்பு கடைபிடிக்கப்படவேண்டும், அப்படி குறைவின் வரம்புக்குட்பட்ட ஆட்கள் பங்கேற்கவில்லை என்றால் அரசு ஆணை நிலை எண் 150 (சி-1)(1998), விதி 5 ன் படி அந்த கிராமசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு வேறு ஒருநாள் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட வேண்டும். இந்த விதி கடைபிடிக்கப்பட்டதா என மக்களிடம் கீழ் கண்ட கேள்விகளை கேட்டோம்.

7) கிராம சபையில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை ?

11.png

76 கிராம ஊராட்சிகளில் (அதாவது 17%) 25 நபர்களுக்கும் குறைவாக மக்கள் கலந்து கொண்டனர். 141 கிராம ஊராட்சிகளில் (அதாவது 32 %) 50 நபர்களுக்கும் குறைவாக மக்கள் கலந்து கொண்டனர். 144 கிராம ஊராட்சிகளில் (அதாவது 32%) 100 நபர்களுக்கும் குறைவாக மக்கள் கலந்து கொண்டனர். 85 கிராம ஊராட்சிகளில் (அதாவது 19%) 100 நபர்களுக்கும் மேலாக மக்கள் கலந்து கொண்டனர்.

500 க்கும் குறைவானவர்கள் மக்கள்தொகை உள்ள பஞ்சாயத்துகளில் கூட குறைந்தபட்சம் 50 பேர் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் மேலே உள்ள தகவல் படி குறைந்தபட்சம் 49% கிராம ஊராட்சிகளில் குறைவெண் வரம்பு எட்டப்படவில்லை. எட்டாத கிராமசபை விதிகள் படி ரத்து செய்யப்பட்டு, காரணம் அறிந்து குறைவெண் வரம்பு எட்டப்படும் வகையில் அதிக மக்கள் பங்கேற்கும் கிராமசபை கூட்டப்படவேண்டும். ஆனால் குறைவெண் வரம்பு இல்லாமலேயே 49% கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்துள்ளது. உண்மையான பஞ்சாயத்தின் மக்கள் தொகை வைத்து கணக்கிட்டால் குறைவெண் வரம்பு எட்டப்படாத கிராமங்கள் மேலும் அதிகமாக இருக்கும்.

கிராமசபை என்பது கிராமத்தில் இருக்கும் மக்கள் தங்கள் அன்றாட பிரச்சனைகளை தெரிவித்து, தீர்வு காணும் ஒரு இடம், குடிநீர், அரசின் சேவைகளை பெறுவது, அதற்கான வழிவகைகள், தெருவிளக்கு, சாலை, பள்ளிக்கூடம், மருத்துவம் போன்ற அத்தியாவசிய அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை பேசி தீர்வுகாணும் இடம்

அரசு ஊழியர்கள் பங்கெடுப்பு :

கிராம ஊராட்சி வளர்ச்சிக்கு பல துறைகள் இணைந்து செயல்படவேண்டியது அவசியமாகிறது, எனவே மக்களின் குறைகளை அறிந்து உரிய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு உரிய சேவை, குறிப்பிட்ட காலத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அக்டோபர் 02, 2021 கிராம சபையில் உண்மையில் எத்தனை அரசு ஊழியர்கள் கலந்துகொண்டார்கள் என அறிய கீழ் காணும் கேள்வி கேட்கப்பட்டது

8) கிராம சபையில் அரசு ஊழியர்கள் எத்தனை நபர்கள் கலந்து கொண்டார்கள்?

8.png

ஒரு அரசு ஊழியர் கூட கலந்து கொள்ளவில்லை என்று 20 கிராம ஊராட்சி சார்ந்தவர்களும் (5%), ஓரிரு அரசு ஊழியர் கலந்து கொண்டார் என 92 கிராம ஊராட்சி சார்ந்தவர்களும் (22%), 3 முதல் 5 அரசு ஊழியர்கள் வரை கலந்து கொண்டார்கள் என 138 கிராம ஊராட்சி சார்ந்தவர்களும் (33%), 6 முதல் 10 அரசு ஊழியர்கள் வரை கலந்து கொண்டார்கள் என 114 கிராம ஊராட்சி சார்ந்தவர்களும் (28%), 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என 48 கிராம ஊராட்சி சார்ந்தவர்களும் (12%) கூறியுள்ளனர். எங்கெல்லாம் MLA / MP போன்றவர்கள் கலந்து கொள்கிறார்களோ அங்கெல்லாம் அரசு ஊழியர்கள் அதிகம் கலந்து கொள்வது பார்க்க முடிகிறது.

9. உங்கள் கிராம சபையில் MP / MLA / கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் கலந்து கொண்டார்களா ?

3.png

உங்கள் கிராம சபையில் MP / MLA / கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் கலந்து கொண்டார்களா என கேட்டகப்பட்டதற்கு சுமார் 44 இடங்களில் ஆம் என்றும், அதில் 42 இடங்களில் நாற்காலிகள் / மேடை ஏற்பாடு / கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் தலைமையில் நடந்தது என்றும் கருத்து வழங்கியுள்ளனர்

V: ஆய்வு முடிவுகள்

இந்த ஆய்வில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்களை தொகுத்து ஆய்வு முடிவுகளை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

 1. 75% கிராம ஊராட்சிகளில் முறையாக ஏழு நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு தெரிவிக்கவில்லை என்று ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
 2. 43% கிராம ஊராட்சிகளில் கிராம சபை சந்திப்பிற்கு தீர்மான பதிவேடு கொண்டுவரப்படவில்லை என்று ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
 3. 59% கிராம ஊராட்சிகளில் பொது மக்களின் கோரிக்கையை தீர்மான பதிவேட்டில் பதிவு செய்யவில்லை என்று ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
 4. 79% கிராம ஊராட்சிகளில் வரவு - செலவு கணக்குகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை என்று ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
 5. 63% கிராம ஊராட்சிகளில் வரவு - செலவு கணக்குகள் படித்து காண்பிக்கப்படவில்லை என்று ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
 6. 50% கிராம ஊராட்சிகளில் பஞ்சாயத்து தலைவர் அல்லது வார்டு உறிப்பினர்களின் தலையீடு இருந்தது என்பது ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மேலும் அப்படி தலையீடு இருந்த ஊராட்சிகள் பெரும்பாலும் பெண்கள் தலைவர்களாகவோ துணை தலைவர்களாகவோ இருந்த ஊராட்சிகள்.
 7. குறைந்தபட்சம் 49% கிராம ஊராட்சிகளில் கிராம சபை குறைவெண் வரம்பு (QUORUM) இல்லாமலேயே கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
 8. 60% ஊராட்சிகளில் 5 க்கும் குறைவான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். MLA / MP பங்கெடுத்த கிராம சபைகளில் 10 க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பங்கெடுத்து உள்ளனர்.

பெரும்பாலும் கிராம சபைகள் அது உருவாக்கபட்ட உண்மை நோக்கத்துடன் செயல்படுத்தப்படவில்லை என்பது மேலே உள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மிக முக்கியமாக மக்களின் பங்கெடுப்பை உறுதி செய்து, அவர்கள் பிரச்சனைகளை கேட்டறிந்து அவற்றை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் கருத்து படி தீர்க்க வழிவகை செய்யவேண்டிய இடம் கிராம சபை. மேலும் நேர்மையான வெளிப்படையான பஞ்சாயத்து உருவாக மக்கள் முன்பு தீர்மானம், வரவு - செலவு மற்றும் நிதிநிலை போன்றவற்றை வெளிப்படையாக வைத்தல் அவசியம். ஆனால் ஆய்வு முடிவுகள் கிராம சபை நடக்கிறது என்ற விழிப்புணர்வு கூட முக்கால்வாசி கிராமங்களில் செய்யப்படவில்லை என்பதை காட்டுகிறது. அரசு இந்த முடிவுகளை வைத்து கிராம சபை சரியாக செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை புரிந்து கொண்டு அதை சரி செய்ய உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும்.

VI: ஆய்வின் பரிந்துரைகள்:

மக்கள் பங்கெடுப்புடன் ஜனநாயக தூணான கிராம சபைகள் வெளிப்படைதன்மையுடனும் பொறுப்புடைமையுடனும் நடக்க கீழ் காணும் ஆலோசனைகள் அரசுக்கு பரிந்துரைக்கிறோம்.

 1. முழுமையாக 7 நாட்களுக்கு முன்னதாக கிராமசபை நடக்கும் நேரம், இடம் போன்ற விவரங்களை தண்டோரா, துண்டறிக்கை மற்றும் பொது இடங்களில் விளம்பர பலகை போன்றவை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். குறைவெண் வரம்பு பெரும்பாலான கிராமங்களில் இல்லாத காரணம் இந்த விழிப்புணர்வே. எனவே விழிப்புணர்வு ஏற்படுத்துவதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி துறை உறுதி செய்ய வேண்டும்.
 2. பற்றாளர் மற்றும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு கிராம சபை சட்டங்கள் குறித்தும் கிராம சபை நடத்தப்படும் அன்று அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்தும் உடனே பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
 3. மக்கள் பிரச்சனைகளையும் கருத்துக்களையும் கேட்டு அவற்றை பதிவேட்டில் ஏற்றுவது அவசியம். மேலும் கிராம சபை ஒப்புதல் பெற்றால் அதை தீர்மானமாக பதிவேட்டில் பதிவு செய்யும் வழிமுறைகளையும் அதை செயல்படுத்தும் வழிமுறைகளையும் பஞ்சாயத்து தலைவர்கள், பற்றாளர் உறுதி செய்ய வேண்டும். ஆட்சியர் தான் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இந்த வழிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
 4. வெளிப்படைதன்மை தான் நேர்மையான பஞ்சாயத்துகளை உருவாக்கும். எனவே சட்ட விதிகளின் படி கிராம சபையில் வரவு செலவு கணக்குகளை, திட்டம் வாரியாக நிதி நிலைமையை, பட்ஜெட் கணக்குகளை மற்றும் நிதி தணிக்கை அறிக்கைகளை மக்கள் பார்வைக்கு வைத்து அவை படித்து காண்பிக்கப்பட்டு அவர்கள் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
 5. தணிக்கை அறிக்கைகளில் சொல்லப்பட்ட முறைகேடுகள்/ குறைபாடுகள் சம்பந்தப்பட்ட விளக்கங்களை கிராம சபையில் பஞ்சாயத்து தலைவர் முன்வைத்து அந்த விளக்கங்களுக்கான கிராம சபை ஒப்புதல் பெறப்பட வேண்டும். கிராமசபை ஒப்புதல் வழங்காதவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
 6. அரசியல் அதிகாரத்தில் இருக்கும் அந்த கிராம சபை உறுப்பினராக அல்லாதவர்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்க்கவேண்டும், அப்படி கலந்து கொள்வதால் மக்கள் கருத்துக்கள் கேட்கப்படாமல் அது ஒரு அரசியல் கூட்டம் போல மாறிவிடுகிறது. எனவே இதை முதலமைச்சர் மற்றும் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகளுக்கு இதை வலியுறுத்த வேண்டும்.
 7. கிராம சபையில் அனைத்து துறைகளின் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் நேரடியாக அரசு ஊழியர்களிடம் கிராம சம்பந்தமான பிரச்சனைகளை எழுப்பவும் மக்கள் பிரச்சனைகளை நேரடியாக தெரிந்து கொண்டு அதற்கான தீர்வை நோக்கி அரசு ஊழியர்கள் வேலை செய்யவும் அது வழி வகுக்கும்.
 8. பெண்கள் பஞ்சாயத்து தலைவர்களாக இருக்கக்கூடிய இடங்களில் ஆண்கள் தான் (உறவினர்) பெரும்பாலும் தலையிட்டு தலைவர்களாக செயல்படுகின்றனர். இந்த நிலை மாற பெண் பஞ்சாயத்து தலைவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். அவர்களை வலிமைபடுத்துதல் மூலமாக மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும்.
 9. இதைத் தவிர இந்த ஆய்வில் கேட்கப்படாவிட்டாலும், திட்ட பயனாளிகள் பட்டியல் படிக்கப்பட்டு அதை கிராம சபையில் ஒப்புதல் வாங்கவேண்டிய சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்று புகார்கள் வந்துள்ளது. இதுதான் உண்மையிலேயே திட்டங்கள் யாருக்கு போய் சேர வேண்டுமோ அவர்களுக்கு செல்கிறதா என்பதை உறுதி செய்யும். மேலும் பஞ்சாயத்து தலைவர்கள் அவர்களின் சொந்தங்களுக்கு நெருங்கியவர்களுக்கு மட்டும் அதிக திட்டங்கள் எடுத்து செல்லப்படும் பொழுது அது கேள்விக்குறியாக்கப்படும். எனவே ஒவ்வொரு கிராம சபையிலும் திட்ட பயனாளிகள் குறித்த விவரங்களை படித்து அது ஒப்புதல் பெற வைப்பது அவசியம்.
 10. சட்டவிதிகளின் படி கிராமசபை நடந்த 3 நாட்களுக்குள், கிராமசபையின் தீர்மான நகல்கள், ஊராட்சி ஆய்வாளர் / மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும், அது அடுத்த சில நாட்களில் உரிய அரசு துறைக்கு தெரியப்படுத்தி மக்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க துவங்கியிருக்க வேண்டும், ஆனால் அக்டோபர் 02, 2021 கிராம சபை நடந்து மூன்று வாரங்கள் ஆன நிலையில் இன்று வரை அரசு சார்பில் எத்தனை கிராம ஊராட்சிகளில் கிராம சபை நடந்தது என்று துல்லியமான விவரம் கூட வெளியிடப்படவில்லை. எனவே அரசு அதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்
 11. அரசே இது போன்ற ஆய்வுகளை புள்ளியல் ரீதியாக ஒவ்வொரு கிராம சபை முடிந்ததும் நடத்த வேண்டியது அவசியம். கிராம சபை முழுமையான ஜனநாயக வழியில் நடைபெறவும் அது மேலும் சிறந்த முறையில் நடைபெறவும் இது போன்ற ஆய்வுகள் உதவும். VII: முடிவுரை

கிராம சபைகள் ஜனநாயகத்தின் முதுகெலும்பு. அதை தொடர்ந்து வலுப்பெற செய்வது அரசு மற்றும் மக்களின் கடமை. இனி வரும் ஒவ்வொரு கிராமசபையிலும் இந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ள பிரச்சனைகள் நடைபெறாமல் இருக்கவும் மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு கலந்து பேசி தீர்வு காணும் இடமாக கிராம சபை மாறவும் அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், ஆக்க பூர்வமான பங்கேற்பும், உரையாடலும் நிகழ்ந்தால் மட்டுமே ஒட்டு மொத்த ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சியை மக்கள் எட்டமுடியும்

வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயர்வான்