கோவை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலக இட முறைகேடு, பாரபட்சம் மற்றும் ஊழல்

d3620741-551c-47c9-ab1d-826fe6570d74.jpeg

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ராமச்சந்திரா தெரு எண் 72 ல் அமைந்துள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலக இடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சில பொது ஊழியர்கள் பாரபட்சமாக முறைகேடாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தனிப்பட்ட அமைப்பான நல்லறம் டிரஸ்டுக்கு வழங்கியது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் பிற சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளுமாறு லஞ்ச ஒழிப்பு துறையிடம் அறப்போர் இயக்கம் மனு அனுப்பியுள்ளோம்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ராமச்சந்திரா தெருவில் கோவை மாநகராட்சி சுகாதார துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருந்த வார்டு 23 சுகாதார ஆய்வாளர் அலுவலகம் பழமை ஆனதால், அது இடிக்கப்பட்டு புதிதாக கட்ட 2015, 2016, 2017 ஆண்டுகளில் டெண்டர்கள் கோரப்பட்டது. சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை தற்காலிகமாக மேற்கு மண்டல அலுவலகத்தின் வெளியில் டின் ஷீட் அமைக்கப்பட்டு அவர்களை மாற்றினர்.

குறைந்தது 1.75 கோடி செலவழித்து 3 டெண்டர்கள் போடப்பட்டது. அதில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி வணிக வளாகமாக கட்டும் டெண்டர்கள் போடப்பட்டது. கிட்டத்தட்ட 5000 சதுரடிக்கு கட்டி முடித்த பின், சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திற்கு அதை கொடுக்காமல் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மற்றும் அவரது சகோதரர் எஸ்.பி.அன்பரசன் நடத்தும் நல்லறம் டிரஸ்டுக்கு அம்மா IAS அகடெமி நடத்த வழங்கப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்த அம்மா IAS அகாடமி பிப்ரவரி 3, 2019 ம் தேதி துவக்க விழா நடந்த பொழுது அதில் அப்போதைய கோவை மாநகராட்சி ஆணையர் விஜய் கார்த்திகேயன் கோவை MLAக்கள் மற்றும் சில பொது ஊழியர்கள் கலந்து கொண்டனர். இவை அனைத்தும் இது ஒரு அரசு நடத்தும் IAS அகாடமி போல் தோற்றத்தை ஏற்படுத்தினர். ஊடகங்களிலும் இதை பற்றிய செய்தியில் அரசு இதை துவங்கியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அம்மா IAS அகாடமி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடத்தும் நல்லறம் டிரஸ்டின் ஒரு அங்கம். இதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மிக முக்கியமாக ஒரு பகுதி சுகாதார ஆய்வாளர் அலுவலகமாக கட்டப்பட டெண்டர் விடப்பட்டும் அது சுகாதார துறைக்கு சொந்தமான இடமாக இருந்தும் அமைச்சரின் தனிப்பட்ட டிரஸ்டுக்கு துவக்க விழா நடத்திய கோவை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அமைச்சர், இன்று வரை சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை புது அலுவலகத்தில் இயங்க விடாமல் டின் ஷீட் போட்ட கூரையில் அது இயங்குகிறது. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் மிக முக்கியமான பொது மக்கள் பயன்படுத்த வேண்டிய பொது பணத்தில் கட்டிய அலுவலகத்தை இயங்க விடாமல் முழு வளாகத்தையும் அமைச்சரின் அம்மா IAS அகாடெமிக்கு வழங்கி பொது மக்களுக்கும் அரசுக்கும் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். உள்ளாட்சி துறை அமைச்சராக தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அமைச்சர் இந்த வளாகத்தை முழுவதுமாக தன் டிரஸ்டுக்கு கொடுத்துள்ளார். அந்த வளாகத்தில் இது கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்ற எந்த அத்தாட்சியும் வைக்கப்பட கூட இல்லை. தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் இதைப்பற்றிய விவரங்கள் கேட்ட பொழுது, விவரங்களை சட்ட விரோதமாக கோவை மாநகராட்சி நிராகரித்துள்ளது. அமைச்சரின் டிரஸ்டுக்கு கொடுக்கப்பட்ட மன்ற தீர்மானம், ஒப்பந்த விவரங்கள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. கோவை மாநகராட்சி டெண்டர்கள்/ ஏலம் சம்பந்தப்பட்ட அனைத்தும் இணையதளத்தில் இருப்பினும், அமைச்சரின் டிரஸ்டுக்கு வழங்கப்பட்டது சம்பந்தப்பட்ட டெண்டர்கள் / ஏலம் விவரங்கள் மட்டும் இணையதளத்தில் இருந்து கோவை மாநகராட்சி அலுவலர்களால் மறைக்கபட்டுள்ளது.

இவை அனைத்தும் அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் உள்ள உள்கூட்டை நிரூபிக்கிறது. மேலும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் வார்டு 23 அலுவலகம் எங்கு இயங்குகிறது என்று கேட்டதற்கு பொது தகவல் அலுவலர் புதிய வளாகத்தில் என்றும் மேல்முறையீடு அலுவலர் பழைய அலுவலகம் என்றும் மாறுபட்ட தகவல்களை தந்துள்ளனர்.

தகவல் பெறும் உரிமை சட்ட மனுவிற்கு பின், இந்த மாதம் கோவை மாநகராட்சி அலுவலர்கள் புதிய வளாகத்திற்கு சென்று ‘அம்மா IAS அகாடமி இலவச பயிற்சி மையம்’ என்னும் பலகையின் மேல் ஒரு ப்ளெக்ஸ் கொண்டு ‘கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் வார்டு 23 மற்றும் 24’ என்று ஒட்டியுள்ளனர். ஆனால் சுகாதார் ஆய்வாளர் அலுவலகம் இன்று வரை டின் ஷீட்டில் மேற்கு மண்டல அலுவலகத்தில் தான் இயங்கி வருகிறது என்பதை வீடியோ ஸ்டிங் மூலமாகவும் வெளிக்கொண்டு வந்துள்ளோம்.

எனவே இந்த பாரபட்ச்சம், முறைகேடு மற்றும் ஊழல் குறித்த முகாந்திரம் தெளிவாக உள்ள நிலையில் அமைச்சர் வேலுமணி மற்றும் பொது ஊழியர்கள் மீது உடனடியாக ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் பிற சட்டங்களில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு மனு அனுப்பியுள்ளது. மேலும் அறப்போர் இயக்கம் இந்த புதிய சுகாதார ஆய்வாளர் அலுவலகலத்தை முதல்வர் அல்லது துணை முதல்வர் துவக்கம் செய்து அது மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்ற பெயர் பலகை வைத்து, உடனடியாக சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை அமைச்சரின் அம்மா IAS அகாடமியிடமிருந்து மீட்டு சுகாதார துறைக்கு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.