ரேஷன் டெண்டர்களை Christy நிறுவனங்களுக்கு ஆதரவாக செட்டிங் செய்து அரசுக்கு 2028 கோடி இழப்பு ஏற்படுத்திய புகாரில் சிக்கியுள்ள முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று அது குறித்து பதில் கொடுத்துள்ளார். எதிர்பார்த்தபடியே அவரது பதிலில் ஒரு துளி உண்மை கூட இல்லை.

1. புகாரில் 1% கூட உண்மை இல்லை - காமராஜ்.

அறப்போர் இயக்கம் DVACல் கொடுத்துள்ள புகார் https://arappor.org/blog/blog/post/arappor-complaint-dvac-ration-scam-2015-2021 மொத்தம் 45 பக்கங்கள் கொண்டது. இதில் எந்த பக்கத்தில் கொடுத்துள்ள தகவல் உண்மை இல்லை என்று காமராஜ் விளக்கம் அளிப்பாரா? இந்த 45 பக்க புகாருக்கு ஆதாரங்களாக 190 பக்க ஆதாரங்கள் https://bit.ly/2028CrRationScamAnnexure கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அரசாங்கத்திடம் இருந்து RTI மூலம் பெறப்பட்டவை. இவற்றில் எந்த தகவல் உண்மை இல்லை என்று காமராஜ் சொல்வாரா?

2. விளம்பரத்துக்காக கொடுத்த புகார் - காமராஜ்.

எது சார் விளம்பரம்? அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக ஆட்சியில் Christy நிறுவனத்திற்கு சாதகமாக அன்றைய இயக்குனர் சுதாதேவி அவர்களால் மாற்றப்பட்ட டெண்டர் விதிகள் நீக்கப்பட்டு பல நிறுவனங்களும் போட்டியிடும் வகையில் விதிகளை மாதிரி டெண்டர் விடப்பட்டதால் தமிழ்நாடு அரசுக்கு 120 கோடி இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இதுவா சார் விளம்பர புகார்? இப்படி சொல்ல உங்களுக்கு மனசாட்சி கூசவில்லையா?

3. அறப்போர் இயக்கம் Competition Commission of Indiaவிடம் கொடுத்த புகார் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டது - காமராஜ்.

அப்படியா? யார் சொன்னது? நீங்க சொல்வதில் துளியாவது உண்மை இருந்தால் அறப்போர் இயக்கம் Competition Commission of Indiaவிடம் கொடுத்த புகார் மற்றும் அதை நிராகரித்த அவர்களது பதில் கடிதம் ஆகியவற்றை காட்டுங்களேன் பார்க்கலாம். மேலும் இது வரை இந்த ரேஷன் ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் CBI (மத்திய அரசு நிறுவனங்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால்) மற்றும் DVAC ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே புகார் அளித்துள்ளது. இரண்டு புகார்களும் நிராகரிக்கப்படவில்லை. வேறு எந்த புகார் நிராகரிக்கப்பட்டது என்று நீங்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும் காமராஜ்.

4. எந்த ஒரு தனிப்பட்ட நபரும் தங்கள் ஆதாயத்துக்காக இதில் தவறு செய்ய முடியாது - காமராஜ்.

ரொம்ப சரியா சொன்னீங்க. அதனால் தான் அறப்போர் இயக்கம் புகாரில் உங்கள் பெயருடன் சுதா தேவி IAS, Christy குமாரசாமி மற்றும் ரேஷன் துறை உயர் அதிகாரிகள் அனைவர் பெயரையும் இணைத்துள்ளது. கூட்டாக இணைந்து செட்டிங் செய்து அரசுக்கு 2028 கோடி இழப்பு ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.

இந்த ஊழலுக்கு நீங்கள் பதில் சொல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை காமராஜ் அவர்களே. ரொம்ப காலத்துக்கு இப்படி பொய் சொல்லி தப்பிக்க முடியாது. பாமர மக்களுக்கு கொடுக்கப்படும் உணவில் ஈவு இரக்கம் இல்லாமல் கொள்ளை அடித்த ஒவ்வொருவரும் தண்டிக்கப்படும் வரை அறப்போர் தொடரும் !!